சென்னை அண்ணா அறிவாலயத்தில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் ஆகியோரது திருமணத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையேற்று இன்று (ஏப்ரல் 30) நடத்தி வைத்தார்.
இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,
“சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து பேசும்போது, கடந்த ஆட்சியை விட தமிழ்நாடு தற்போது எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை குறிப்பிட்டு சொல்வதற்காக, ‘ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது’ என்று சொன்னேன். Mk Stalin clarifies what happened

அதற்கு எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார், ‘முதல்வர் சிறப்பாகவும் தெளிவாகவும் பேசினார். ஆனால், அவரது பேச்சில் இடம்பெற்ற ஊர்ந்து என்ற சொல்லை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கூறினார்.
உடனடியாக நான், ‘ஊர்ந்து என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். குழந்தைகள் தவழ்ந்து வருவதில்லையா?
ஏற்கனவே, எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘நான் தவழ்ந்து தவழ்ந்து வந்து படிப்படியாக முதலமைச்சரானேன்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவை நேற்று தான் நான் பார்த்தேன். அதை முன்கூட்டியே பார்த்திருந்தால், சட்டமன்றத்திலேயே அதுபற்றி சொல்லியிருப்பேன்.
தவழ்ந்து என்பது அன்பார்லிமென்ட் வார்த்தை கிடையாது. யாரையாவது நான் குறிப்பிட்டு பேசியிருப்பதாக நீங்கள் கருதினால், அவர் பெயரை சொல்லுங்கள் அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க நானே சிபாரிசு செய்கிறேன் என்று சொன்னேன். ஆனால், உதயகுமார் எதையும் பேசாமல் உட்கார்ந்துவிட்டார்.
தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ, அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். அதனால், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்.
நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் எப்படிப்பட்ட கூட்டணியோடு வந்தாலும் ஒரு கை பார்ப்போம். அதைப்போல ஐடி, இடி, சிபிஐ என எந்த புலனாய்வு துறையையும் கண்டு பயப்படப்போவதில்லை. ஏனென்றால் எமெர்ஜென்சியை நாம் பார்த்தவர்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். Mk Stalin clarifies what happened









