உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் பதில்!

Published On:

| By Selvam

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 13) குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி 28-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில், திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதலமைச்சர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதலளித்த உதயநிதி ஸ்டாலின், “ஆமா… ஆமா… எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருக்கப் போகிறோம் அவ்வளவுதான்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொங்கல் வாழ்த்து செய்தியில் முதல்வர் ஸ்டாலின் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்… உழைக்கிறேன்… உழைக்கிறேன்.

ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் திமுகவினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள் தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.

திமுக தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும்.

நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.

எப்போதும் பொங்கல் அன்று தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு. தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. மத்திய அரசில் சமூகநீதி – சமதர்ம – மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியா கூட்டணி : ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மறுத்த நிதிஷ் குமார்

அரசு மருத்துவமனைகளில் ஓராண்டே போதுமாம்: மருத்துவ மாணவர்களுக்கு அரசின் சலுகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share