சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 5) பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது. முதல்வர் பரிசீலிப்பாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என்றார். தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்று விட்டார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உண்டா இல்லையா என்று கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் வெளியிட்ட செய்தியில் “இப்போது துணை முதல்வர் என்ற பதவியை உருவாக்கினால் முதல்வருக்கு உடம்பு முடியலையா? என்ற பேச்சை எதிர்க்கட்சியினர் பெரிதுபடுத்துவார்கள்.
மேலும், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி வரும். அந்த குழப்பமெல்லாம் எதற்கு?” என்று தன்னிடம் நேருக்கு நேராக கேட்டவர்களிடம் ஸ்டாலின் பதிலளித்ததாக குறிப்பிட்டிருந்தோம்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?
நெல்லை மேயர் தேர்தல்… திமுக வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல்!