விக்கிரவாண்டி பயணத்தை தவிர்த்த ஸ்டாலின்: வேட்பாளரை ஆதரித்து காணொலி பிரச்சாரம்!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் பாமக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், விக்கிரவாண்டியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்களோடு ஸ்டாலின் தொலைபேசியில் பேசி அங்கிருக்கும் நிலவரம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும், பிரச்சாரத்திற்காக விக்கிரவாண்டி செல்லும் திட்டம் இல்லை என்று மின்னம்பலத்தில் நேற்று (ஜூலை 4)  நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், விக்கிரவாண்டி தேர்தல் பயணத்தை தவிர்த்துவிட்டு, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 5) நான்கு நிமிடம் காணொலி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசும்போது, “விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுகவின் வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிற அன்னியூர் சிவாவை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் தொண்டர் அவர்.

1986-ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞருடைய உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர்.

கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் திமுகவிற்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கிற ரத்த நாளங்களில் ஒருத்தர்.

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக, ஒன்றுபட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினராக, அன்னியூர் கூட்டுறவு சங்க தலைவராக, மாநில விவசாய அணி துணை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் . தற்போது விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஆகஸ்ட் மாதத்திற்குள் என்டிஏ ஆட்சி கவிழும்” – அடித்து சொல்லும் லாலு பிரசாத்

நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share