வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடி: ஸ்டாலின் அறிவிப்பு!

By Minnambalam

|

Published on 10 Oct 2023, 12:20 PM

mk stalin announces trade in discount

ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராத தொகை, செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 10) அறிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

110- விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “தமிழ்நாட்டில் உள்ள வணிகர் மற்றும் நிறுவனங்களுக்கும் வணிக வரித்துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர ஒரு நல்ல வாய்ப்பாகவும் சிறு வணிகர்களின் நலன் காத்திடுவதற்கான மேலும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும் இந்த அரசு செயல்படுத்தவுள்ள புதிய வரி நிலுவை தொகை சமாதான திட்டம் பற்றிய அறிவிப்பை 110 விதியின் கீழ் வெளியிட விரும்புகிறேன்.

தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகை தொடர்பாக 2, 11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 1,42,569. இவற்றில் நிலுவையாக உள்ள தொகை ரூ.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மிக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிக வரித்துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு நமது வணிகர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

ADVERTISEMENT

இவற்றில் பெரும்பாலான வழக்குகள் தமிழ்நாடு வணிக வரி சட்டம், தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள். மேற்கூறிய இரு முக்கிய சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களை உள்ளடக்கி 1.07.2017 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலுவை தொகை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து இத்தகைய பழைய நிலுவை தொகைகளை வசூலித்திட ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டின் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராத தொகை, செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டிலும் ரூ.50 ஆயிரத்திற்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். அரசின் இந்த முடிவால் 1,40,398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95,502 சிறு வணிகர்கள் பயனடைவார்கள்.

நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர இதர வணிகர்கள், மற்றும் நிறுவனங்கள் அனைவரும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை தொகை உள்ளவர்கள் என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

மேற்கூறிய நான்கு வரம்புகளில் முதல் வரம்புகளில் உள்ளவர்கள் 20 விழுக்காட்டை கட்டி நிலுவை வழக்குகளிலிருந்து வெளியே வரலாம்.

இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிகர்கள் நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி மற்றும் அபராத தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டை கட்டினால் நிலுவை வழக்குகளிலிருந்து வெளியே வரலாம் என்று இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சமாதான திட்டம் 16.10.2023 முதல் 15.02.2024 வரை நடைமுறையிலிருக்கும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பெயர் பலகையை மட்டும் மாற்றிய அதிமுக அரசு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

‘முட்புதர்கள், குப்பைகளால் சூழப்பட்ட வேலூர் கோட்டை: விடிவு எப்போது?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel