தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி என்று அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று (அக்டோபர் 11) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகள் குறித்து பேசும்போது, “வேளாண் அறிவியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி உலக அளவில் புகழ்பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன். தமிழகத்தின் வேளாண் வளர்ச்சிக்கு அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பும் அறிவுரைகளும் இணைந்திருக்கின்றன.
இன்று காலநிலை மாற்றம் தான் பெரிய பிரச்சனையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து 1969-ஆம் ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டில் பேசியுள்ளார். 2021-ஆம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்த போது அவரை பாராட்டி பேசினேன். பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் 28.09.2023 அன்று மறைவெய்திய போது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய அளவில் முத்திரை பதித்து உலக அளவில் புகழ் பெற்றவர். அவரது நினைவை போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியல் பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிஷ்கின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்
“தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது” – எ.வ.வேலு
