கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர் கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். MK Stalin announced statue
இந்தநிலையில், மதுரையில் நேற்று (ஏப்ரல் 2) தொடங்கி நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகிறார்.
இந்தசூழலில், தலைநகர் சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்ற பிரகடனத்தை உலக தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக வடித்து தந்த புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்.
இழப்பதற்கு என்று எதுவுமில்லை, பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்று நம்பிக்கை விதைகளை விதைத்தவர். அதேபோல தொலைநோக்கு சிந்தனையாளர். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள். பலர் வரலாற்றிற்கு தொண்டாற்றியுள்ளனர்.
ஆனால், வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த சிலரில் தலைமகனாக போற்றப்படுவர் கார்ல் மார்க்ஸ். உலக புரட்சிகளுக்கும் இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும், அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனை தான்.
அப்படிப்பட்ட எல்லோருக்கும் எல்லாம் என்ற சிந்தனை கொண்ட அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை இந்த பேரவையில் தாக்கல் செய்தோம்.
இந்தியாவை பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக எழுதியவர். தீர்க்கமுடியாத பல்வேறு முரண்பாடுகள் உள்ள இனங்கள், புலன்மரபுகள், சாதிகள், சமய கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டு இருக்கின்ற புவியியல் ஒற்றுமையை தான் இந்தியா என்று அழைக்கிறோம்.
இந்தியாவில் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமூக நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான கவர்ச்சிகரமாக தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என்று எழுதியவர் கார்ல் மார்க்ஸ். அதனால் தான் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன் முதலாக தமிழ் மொழியில் மொழி பெயர்த்து 1931-ஆம் ஆண்டே தமிழில் வெளியிட்டார் பெரியார்.
அத்தகைய மாமேதை மார்க்ஸ் உருவச்சிலை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய சென்னை மாநகரில் மார்க்ஸின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார். MK Stalin announced statue