1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 29) தெரிவித்தார். Stalin announced september police day
சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கையின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,
“குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன்.
இந்தநிலை உருவாகவேண்டும் என்றால், காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் சில பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.
காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் நான், இந்த தருணத்தில், இந்த அவையின் மூலமாக பொதுமக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம்முடைய அனைவரின் கூட்டுப் பொறுப்பு.
எனவே, நீங்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும். சின்ன சின்ன அலட்சியங்கள்கூட தவிர்த்து, சுய ஒழுக்கத்தோடு எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடந்த பிறகு, உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களை பாராட்டும் அதேவேளையில், ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே, அதை உணர்ந்து தடுக்கும் முன்னெச்சரிக்கையும் நமக்குத் தேவை.
உங்கள் சுற்றுப்புறங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம், செயல்பாடுகள் ஏதாவது தெரிந்தால், உடனடியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்துங்கள்.
அதுமட்டுமல்ல, ஓய்வில்லாமல், விழிப்புணர்வோடும் கண்காணிப்போடும் களத்தில் இருக்கும் காவல்துறையினரிடம் கனிவாக நடந்துக்கொள்ளுங்கள்.
அதேபோல் காவல்துறையினரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும். காவல்துறையிடம் அதிகாரம் இருக்கிறது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும்தான் என்பதை அத்துமீறும் சில காவலர்கள் உணரவேண்டும்.

காவல் உயரதிகாரிகள் இதை உறுதிசெய்யவேண்டும். காவலர்கள் தங்களின் பணிச்சுமையையும் தனிப்பட்ட வெறுப்புகளையும் பொதுமக்களிடம் காட்டக் கூடாது. காவல்துறையும் பொதுமக்களும் நண்பர்கள் என்பதை இருதரப்பும் உணர்ந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்திட என் நெஞ்சில் நீண்ட காலமாக இருந்து வரும் எண்ணத்தை, உணர்வை செயல் வடிவம் கொடுக்க நான் விரும்புகிறேன்.
சட்டம் ஒழுங்கை காப்பற்றி இரவு பகலும் கண் துஞ்சாது காவல் பணியில் ஈடுபட்டு, பொது அமைதியை பாதுகாக்கும் காவலர்களுக்கென தனி நாளை கொண்டாடுவதற்காக, காவலர்களின் சேவையை போற்றி பாராட்டிட முதன் முதலாக 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்.
இந்நாளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல்துறையின் சிறப்புகளை சொல்லக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்துதல், குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அன்று நடைபெறும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். Stalin announced september police day