மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 3) தெரிவித்தார். Mookaiya Thevar memorial building
சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,
“அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும் உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103-ஆவது பிறந்தநாள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். இளம் வயதில் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் மூக்கையா தேவர்.
1971-ஆம் ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர். ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக வென்று மக்கள் நாயகனாக வளர்ந்தவர். 1967-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றபோது அண்ணாவுக்கு தோள் கொடுத்தவர் பி.கே.மூக்கையாத் தேவர்.
அப்போது இந்தப் பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராக இருந்த அவர்தான் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவரும் அவர்தான். தேவர் சமுதாய மக்களுக்காக கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தவரும் அவர் தான்.
அதனால்தான் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் திமுக ஆட்சியில் அப்போது அமைக்கப்பட்டன.
’நியாயத்துக்கு ஒரு மூக்கையா’ என்று அண்ணாவால் போற்றப்பட்ட பி.கே.மூக்கையாதேவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
மூக்கையா தேவருக்கு மணிமண்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.