தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ‘தென்னிந்திய கூட்டு நடவடிக்கை குழு’ அமைக்கப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 5) தெரிவித்தார். all party meeting opposes
சென்னை தலைமை செயலகத்தில், ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தீர்மானங்களை முன்மொழிந்து பேசும்போது,
“இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.
நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முழுமையாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது.
இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் உறுதியளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும்.
மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971 மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களிடையே எந்தவிகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை இந்த அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும் அதேசமயம் கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது எனவும் அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்துச்செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும் அதற்கான முறையான அழைப்பை கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என்று தெரிவித்தார்.