MIvsDC : டெல்லி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தற்போது நடந்து வரும் 17வது ஐபில் சீசனில் இதுவரை ஒரு வெற்றி கூட பெற முடியாமல் திணறி வந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கடந்த 4 போட்டிகளில் 3ல் தோல்வியை தழுவிய ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 7) மோதின.
இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில், இன்றைய போட்டி நிச்சயம் திருப்பு முனையை ஏற்படுத்தும் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 6 பவுண்டர், 3 சிக்சருடன் 49 ரன்கள் குவித்தார்.
அதே போல் மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் (42), கடைசி ஓவர்களில் கலக்கிய டிம் டேவிட் (45*) மற்றும் ரோமரியோ ஷெப்பர்டு(39) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும் நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ், டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதனையடுத்து 235 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வார்னர் 10 ரன்களுடன் வெளியேறினார்.
எனினும் பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரல் இருவரும் அதிரடியாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு கருதப்பட்ட நிலையில் ஷா (66) மற்றும் போரலை(41) தனது அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் பும்ரா.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் உட்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடிய ஸ்ட்பஸ் 71 ரன்கள் குவித்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி தோல்வியைத் தழுவியது.
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் இரு இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு தாவியுள்ளது.
கடைசி நேரத்தில் களமிறங்கி வெறும் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து 39 ரன்கள் குவித்த ரோமரியோ ஷெப்பர்டு ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: சிக்கிய 4 கோடி, நயினாரை போட்டுக் கொடுத்தது யார்? நெல்லை தேர்தல் நிறுத்தப்படுமா?