கடந்த நவம்பர் 21-ம் தேதி பாங்காக்கில் கோலாகலமாக நடந்து முடிந்த மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி, அழகிப் போட்டியாக இருந்ததை விட, சர்ச்சைகளின் கூடாரமாகவே அதிகம் பேசப்பட்டது. மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் (Fatima Bosch) மகுடம் சூடினாலும், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத அளவுக்குக் குற்றச்சாட்டுகள் வரிசைகட்டி நிற்கின்றன.
போட்டி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இப்போது, ஹைட்டி நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் மெலிசா சபினி (Melissa Sapini) வெடித்துள்ள புது குண்டு, மிஸ் யுனிவர்ஸ் அமைப்பையே ஆட்டம் காண வைத்துள்ளது.
என்ன கேட்கிறார் மிஸ் ஹைட்டி? வெற்றி பெற்ற பாத்திமா போஷை எதிர்த்தோ அல்லது போட்டி முடிவை மாற்றக்கோரியோ மெலிசா குரல் கொடுக்கவில்லை. அவர் கேட்பது ஒன்றே ஒன்றுதான்: “ஒரு சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணை (Independent Investigation) வேண்டும்.”
மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு தங்களுக்குள்ளேயே விசாரித்துக்கொண்டு “எல்லாம் சரியாக உள்ளது” என்று சொல்வதை ஏற்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். “காவல்துறையே தன்னைத்தானே விசாரித்துக்கொண்டால் எப்படி உண்மை வராதோ, அப்படித்தான் இதுவும்” என்று அவர் சாடியுள்ளார்.
நாவத் இட்சாரகிரிஸில் (Nawat Itsaragrisil) மீதான குற்றச்சாட்டு: இந்தச் சர்ச்சையின் மையப்புள்ளியாக இருப்பவர் மிஸ் யுனிவர்ஸ் 2025 ஒருங்கிணைப்பாளரும், மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் தலைவருமான நாவத் இட்சாரகிரிஸில். இவர் போட்டியாளர்களை நடத்திய விதம் குறித்து மெலிசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“நாவத் பேசியதை நாங்கள் அனைவரும் அறையில் கேட்டோம். ஆனால், இப்போது ‘மொழிப் பிரச்சனையால் (Language Barrier) தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’ என்று அவர் கூறுவது, பல மொழிகள் பேசும் போட்டியாளர்களை அவமானப்படுத்தும் செயல். அவர் விடுவது அப்பட்டமான நீலிக்கண்ணீர் (Crocodile Tears),” என்று மெலிசா கொதித்துள்ளார்.
மேலும், வெற்றி பெற்ற பாத்திமா போஷ் மீதே நாவத் பொய் வழக்குகள் போட்டு மிரட்டப் பார்ப்பதாகவும் மெலிசா குற்றம் சாட்டியுள்ளார்.
மேடைக்குப் பின்னால் நடப்பது என்ன? “உலகம் மேடையில் நடப்பதை மட்டும்தான் பார்க்கிறது. ஆனால், மேடைக்குப் பின்னால் (Backstage) நடக்கும் விஷயங்கள் அதைவிட முக்கியம். அங்கு நடக்கும் அவலங்களும், பாதுகாப்பின்மையும் வெளியே வர வேண்டும். பயத்தில் பேச முடியாத பெண்களுக்காகவே நான் குரல் கொடுக்கிறேன்,” என்று மெலிசா கூறியுள்ளார்.
பாத்திமா போஷின் நிலைப்பாடு: வெற்றி பெற்ற பாத்திமா போஷ், சமீபத்தில் அளித்த பேட்டியில் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பை ஆதரித்துப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த மெலிசா, “பாத்திமாவின் அனுபவத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்காக மற்ற பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மறைக்க முடியாது,” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தொடரும் மர்மங்கள்: போட்டி தொடங்குவதற்கு முன்பே மோசடிப் புகார்கள், போட்டியாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம், மேடையில் மிஸ் ஜமைக்கா கீழே விழுந்ததற்குக் கூறப்பட்ட காரணங்கள் எனப் புகார்கள் அடுக்கடுக்காக உள்ளன.
“வால்மார்ட் கிரீடம், இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் என்று ஜோக் அடித்துத் திசைதிருப்ப வேண்டாம். இது பெண்களின் பாதுகாப்பு மற்றும் போட்டியின் நேர்மை (Integrity) சம்பந்தப்பட்ட விஷயம்,” என்று மெலிசா கூறியிருப்பது, சர்வதேச அழகிப் போட்டி உலகத்தையே உற்று நோக்க வைத்துள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? விசாரணை நடக்குமா அல்லது மூடி மறைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
