தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் கட்சியின் வலிமை குறையாமல் பார்த்துக்கொள்ள அக்கட்சியினர் தீவிரமாக வேலை செய்தனர். மேலும் பல இடங்களில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் செய்துள்ளனர். இந்த நிலையில் திமுக அமைச்சர் மகனின் காரை பாமகவினர் அடித்து நொறுக்கியது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக ஜெகத்ரட்சகன் போட்டியிட்டார். இத்தொகுதிக்கு பொறுப்பாக அமைச்சர் காந்தி இருந்தார்.
அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சித்தேரி பகுதியில் வாக்குச் சாவடியை பார்வையிட அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி நேற்று சென்றார்.
அங்கு அவருக்கும் பாமகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பாமகவினர் அவரது காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனையடுத்து சோளிங்கர் தொகுதி பரபரப்புக்கு உள்ளானது.
கார் நொறுக்கப்பட்டது குறித்து புகார் கொடுக்கலாமா என்று யோசித்தபோது, அப்படி கொடுத்தால் தொடர்ந்து பாமகவுடன் இப்பகுதியில் பிரச்சினையாக இருக்கும், இதனால் புகார் எதுவும் வேண்டாம் என்று திமுக நிர்வாகிகள் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அமைச்சர் காந்தி, என் மகன் காரை அடித்து உடைத்திருக்கிறார்கள். இதை எப்படி சும்மா விட முடியும், புகார் கொடுத்தால் தான் பின்னால் இதுபோல் பிரச்சினை நடக்காமல் இருக்கும் என்று புகார் கொடுப்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
இதனையடுத்து வினோத் காந்தியின் உதவியாளர் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். சித்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செழியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வினோத் காந்தியின் காரை நொறுக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சோளிங்கர் தொகுதியில் மற்றுமொரு சம்பவமாக பூத்தின் உள்ளேயே சென்று ஏஜெண்டினை பாமகவினர் அடித்துள்ளனர். இப்படி தொடர் சம்பவங்களால் வாக்குப்பதிவு நாளான நேற்று அந்த பகுதியே பதற்றத்துடன் இருந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? – ராதாகிருஷ்ணன் விளக்கம்!
“சனாதனம் குறித்த கருத்துக்கு உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்” – ரேவந்த் ரெட்டி