அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில், தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி பெறாமல் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை தொடங்கியதாக, உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் பதில்மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரை விடுவித்தன.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்தார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கு நாளை (பிப்ரவரி 5) முதல் 9ஆம் தேதி வரை தினசரி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட சூமோட்டோ வழக்கை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு ஜனவரி 29-ஆம் தேதி ரிஷிகேஷ் ராய் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி,
“உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவு செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி,
“அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடர்பான வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?” என சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வழக்கை பதிவு செய்யத் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது குறித்து பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்,ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்மனுவில்,
“சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பதிவாளர் அலுவலகத்திற்கு தனி நீதிபதி கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தை ஆகஸ்ட் 23-ஆம் தேதி பதிவாளர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனி நீதிபதி அனுப்பிய கோப்புகளை தலைமை நீதிபதி பார்வையிட்டார்.
இந்த வழக்கு விசாரணையானது, ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சூமோட்டோ வழக்கை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 6-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலகில் அதிக வாகன நெரிசலுடைய நகரங்களின் பட்டியல்: இரண்டு இந்திய நகரங்கள் எவை?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
புதிய வசதிகளுடன் கூகுள் மேப்ஸ்!
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை!
Ministers case Anand venkatesh not get approval
