மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று (மே 23) கோவைக்கு வருகை தந்த அமைச்சர் விக்னேஷ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவைக்கு வந்துள்ளேன். ‘எம்மதமும் சம்மதமே’ என்ற மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படையில்தான் இந்த அரசு செயல்படும். கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதாபிமானம் இல்லாதவர்கள் செய்த கொடூரச் செயலாகும். இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில் இவற்றைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க அரசு வழிவகை செய்யும்.
டாஸ்மாக் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி:
டாஸ்மாக் துறையில் ஊழல் பரவலாக உள்ளது. அரசுக்கு வர வேண்டிய வருமானம் தனிநபர்கள் சிலரிடம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக இத்துறை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பல முக்கிய விபரங்களை அறிந்துள்ளேன். இனி ஊழல் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் ஒரு ரூபாய் கூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காலி மது பாட்டில்களை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குடிப்பவர்கள் பாட்டில்களை வெளியே வீசி எறிவதைத் தடுக்கவே, பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து பாட்டிலை மீண்டும் தரும் போது 10 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை முன்னர் இருந்தவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தாலும் சில இடங்களில் பணத்தைத் தர மறுப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதில் சில சட்டச் சிக்கல்களும் நீடிக்கின்றன. சினிமாவில் வருவது போல இவற்றை ஒரே நாளில் உடனே மாற்றிவிட முடியாது. எனினும், இந்த ‘ரூ.10 ஸ்டிக்கர்’ பிரச்சனைக்கு மிக விரைவில் அதிரடியான மாற்றுத் தீர்வு கொண்டு வரப்படும்.
’11 to 11′ கடைகளுக்கு நோட்டீஸ்:
இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீதும், அதனைக்கண்காணிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை பாயும். ’11 to 11′ (காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை) என்ற விதிமீறல் முறையில் செயல்படும் சுமார் 1,600 மதுக்கடைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; அவற்றுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்படும். அனைத்து மனமகிழ் மன்றங்களும் (Clubs) தீவிரமாகக் கண்காணிக்கப்படும். சட்டவிரோத மது விற்பனை குறித்த தகவல்களுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மதுக்கடைகளை மூடுவது மட்டுமே தீர்வாகாது:
அனைத்து மதுக்கடைகளையும் முழுமையாக மூடுவது மட்டுமே இதற்குத் தீர்வாகாது. அப்படிச் செய்தால் சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கமும், கள்ளச்சந்தையில் மது விற்பனையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடைகள் அகற்றப்பட்ட இடங்களில் சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறோம். அகற்றப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் மாற்றுப் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடந்த ஆட்சியைப் போல இந்த ஆட்சி இருக்காது. மக்கள் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் தேவையின்றி அரசியல் செய்யக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குப் பொறுப்பாளர்கள் கட்சி வண்ணம் பூசிய விவகாரம் எனக்குத் தெரியாமல் நடந்துள்ளது,” என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
