அமைச்சர் உதயநிதியின் துறை அலட்சியம் : நான்கு வயது சிறுவன் மரணம்!

Published On:

| By Kavi

சென்னை அண்ணா நீச்சல் குளத்தின் அருகாமையில் தரையில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள முக்கிய நீச்சல் குளங்களான வேளச்சேரி, ஷெனாய் நகர், நேப்பியர் பாலம் அருகேயுள்ள அண்ணா நீச்சல் குளம் ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதன் துணை இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பள்ளிக்கரணையை சேர்ந்த ஹரிஹரன்  நேற்று (ஆகஸ்ட் 28) வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை  தனது குடும்பத்தினருடன் நீச்சல் அடிப்பதற்காக சென்னை நேப்பியர் பாலத்தின் அருகிலுள்ள அண்ணா நீச்சல் குளத்திற்கு சென்றார்.

ஹரிஹரனின் நான்கு வயது மகன் அனிருத்தை குளத்தின் அருகில் தரையில் அமரவைத்து விட்டு குடும்ப உறவினர்கள் நீச்சல்குளத்தில் இறங்கி நீச்சல் அடித்தனர்.

ADVERTISEMENT

குறிப்பிட்ட நேரத்திற்கு பின் அனைவரும் நீச்சல் குளத்தை விட்டு மேலே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. பின் அனிருத்தை தேடிய பொழுது குழந்தை மயங்கிய நிலையில் நீச்சல் குளத்தின் ஆழப் பகுதியில் கிடந்தது தெரியவந்தது.

இதனை கண்ட அனைவரும் உடனடியாக அனிருத்தை மீட்டு அருகிலுள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அனிருத் மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த அண்ணா சதுக்கம் போலீசார்  விசாரணை நடத்தியதில் தரையில் விளையாடிக்கொண்டிருந்த அனிருத் தண்ணீரை கண்டவுடன் விளையாட நினைத்து குளத்தில் இறங்கியுள்ளதாகவும், இதனை குளத்திலிருந்த அனிருத்தின் பெற்றோர்களும், நீச்சல் குளத்தின் ஊழியர்களும், தரையில் இருந்த உயிர்க்காப்பாளரும் கவனிக்காத காரணத்தினாலே அனிருத் குளத்தில் விழுந்து மூச்சு திணறி இறந்ததாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அண்ணா நீச்சல் குளத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

Minister Udhayanidhi's Department Negligence - Four-year-old boy dies in Chennai

இதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் இறப்பு செய்தி கேட்டு வருந்துவதாகவும், துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா நீச்சல் குளத்தின் துணை இயக்குனராக செயல்பட்டு வரும் நிலையில் இந்த மரணம் குறித்து இதுவரை அவர் ஏதும் பேசவில்லை.

இந்தசூழலில் இச்சம்பவத்திற்கு பின் பேசிய சென்னை துணை மேயர் மகேஷ் குமார், “சென்னையில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களும் விளையாட்டு மைதானங்களும் மாநகராட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ள நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி இந்த சம்பவம் குறித்து ஏதும் பேசாத நிலையில் உதயநிதிக்கு எதிராக ஏதும் கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகவே இந்த ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளதாக துணை மேயர் தெரிவித்துள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னையின் முக்கிய நீச்சல் குளங்களில் ஒன்றான அண்ணா நீச்சல் குளத்திலே முறையான விதிமுறைகளும், பாதுகாப்பு நடவடிக்களும் இல்லாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீச்சல் குளத்தில் முறையான பயிற்சி இன்றியும், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் மக்களை அனுமதிப்பதும் , நீச்சல் குளங்களில் உள்ள உயிர் காப்பாளர்களின் கவனக்குறைவுமே இந்த மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கும் மக்கள் இதற்கு முறையாக நடவடிக்கையை எடுப்பதே சரியான தீர்வு என்கின்றனர்.

தமிழ் முல்லை

‘தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு’: தங்கம் தென்னரசு

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு : ஏலம் விட பட்டியல் ஒப்படைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share