சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 6) கருத்து தெரிவித்திருந்தது. இதுகுறித்து, ‘அனைத்தையும் சட்டப்படி சந்திப்போம்’ என உதயநிதி தெரிவித்துள்ளார்.
‘நீட் விலக்கு நம்முடைய இலக்கு’ என்ற வாசகங்களுடன் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக, திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவனை, உதயநிதி இன்று அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்தித்து கையெழுத்து பெற்றார்.
நீட் எதிர்ப்புக் களத்தில் முன் வரிசையில் நிற்கிற தமிழ்நாட்டின் குரலாக, @dmk_youthwing – @dmk_studentwing – @MedicalwingDMK சார்பில் #நீட்_விலக்கு #நம்_இலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக, @VCKofficial_ தலைவர் அண்ணன் @thirumaofficial MP அவர்களை நேரில்… pic.twitter.com/9zy8SGU4aU
— Udhay (@Udhaystalin) November 6, 2023
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நாடகம் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று என்ற கருத்து எங்களுக்கு இல்லை. திமுக உண்மையாக போராடி கொண்டிருக்கிறது. இது திமுக பிரச்சினையோ, உதயநிதியின் பிரச்சினையோ இல்லை. இது மக்களின் பிரச்சினை. நீட் விலக்கு கொண்டு வரப்பட்டால் அந்த பெருமையை அதிமுகவுக்கே கொடுக்கிறேன்,” என்றார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தவறு என்றும், காவல்துறை அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ” அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் சனாதனத்துக்கு எதிராக பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசிவிடவில்லை. அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்கு போகும். எம்எல்ஏ பதவி இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். இளைஞரணி செயலாளர் பதவியும் அப்படித்தான். இவை அனைத்தையும் விட முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்,” என்றார்.
தகுதி என்று தொடங்கி பூஜ்யம் பெர்சண்டைலில் வந்து நிற்கும் நீட் தேர்வை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்திடும் விதமாக #நீட்_விலக்கு_நம்_இலக்கு எனும் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வருகிறோம்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் – ம.தி.மு.க பொதுச் செயலாளருமான அண்ணன்… pic.twitter.com/iiO0unH18k
— Udhay (@Udhaystalin) November 6, 2023
இன்று மாலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து அவரிடமும் மதிமுக நிர்வாகிகளிடமும் நீட் விலக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார். திமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகளையும் சந்திக்க இருக்கிறார் உதயநிதி.
மேலும் நீட் தேர்வு ரத்து தொடர்பான கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெற அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களிடம் நேரம் கேட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
