Udhayanidhi Sanatan case Verdict
சனாதனம் பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) தீர்ப்பளித்துள்ளது.
சனாதனத்திற்கு எதிராக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி,
இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நடைபெற்று வந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி,
“அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை. நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது.
நாத்திகத்தை ஏன் ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது. பேச்சுரிமை என்பது ஒருவரின் இயற்கையான மற்றும் அடிப்படையான மனித உரிமையாகும். அதை பாதுகாக்க வேண்டும்.
தேவை இல்லாமல் வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீண் அடித்தது மட்டுமல்லாமல், அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
சனாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை மற்றும் அமைச்சர் சேகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்,
இந்து முன்னணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராஜகோபால், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள். சனாதனம் என்றால் மக்களை பிளவுபடுத்துவது என்று எங்கும் ஆதாரங்கள் இல்லை” என்று வாதாடினார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், “சனாதனம் பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை. இருப்பினும் கோ – வாரண்டோ வழக்கு விசாரணைக்கு உகந்தது.
சனாதனம் குறித்த அமைச்சர்களின் கருத்து பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளது. அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பரிசு தராத கணவன்… கத்தியால் குத்திய மனைவி – பெங்களூரில் நடந்த விபரீதம்!
முடங்கிய ஃபேஸ்புக்: கலாய்த்த எலான் மஸ்க்
Udhayanidhi Sanatan case Verdict
