இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 18) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், திராவிட இயக்க துணை பொதுச்செயலாளர் மதிவதனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “எதற்காக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்த வேண்டும்? பெரியாருக்கும் விளையாட்டு துறைக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களில் பல பேருக்கு கேள்விகள் எழலாம்.
வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, டிசிப்ளின், துவண்டு போகாத மனஉறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மிக மிக அவசியம். தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக அமைந்தது.
அதற்காக தான் பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளை ஒட்டி விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். பெரியார் மறைந்தபோது, அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தான் முடித்துக்கொண்டிருக்கிறார். அந்த சுற்றுப்பயணத்தை நாம் தொடர்வோம் என்று கலைஞர் எழுதியிருந்தார். பெரியார் உடலால் மறைந்திருந்தாலும், அவரது கருத்துக்கள் என்றும் மறையாது என்பதை தான் கலைஞர் குறிப்பிட்டிருந்தார்.
பெரியார் தனது 95 வயது வரையில் தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக உழைத்தவர். பெரியாரின் கொள்கைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியது. குறிப்பாக இளைஞர்களுக்கு மிக மிக அவசியமானது. அதனால் தான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
100 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, குலத்தொழில் செய்ய வேண்டும், படித்தால் தீட்டு என்று சொன்னார்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் தந்தை பெரியார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துணை முதல்வர் பதவியா… யார் சொன்னது? – உதயநிதி கேள்வி!