ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தேனா? – அண்ணாமலையை விளாசிய சேகர்பாபு

Published On:

| By Selvam

ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை பேசக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மார்ச் 24) பதிலடி கொடுத்துள்ளார். Minister Sekar Babu condemned

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் திருச்சியில் நேற்று (மார்ச் 23) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மனதில் வைத்து அண்ணாமலை இதை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். படிக்காதவர்கள் கல்வியை பற்றி எப்படி பேசலாம் என்று கேட்கிறார். அவரது பேச்சு முன்னாள் முதல்வர் காமராஜரை களங்கப்படுத்துவது போல தான் உள்ளது.

படிப்பிற்கும், சேவைக்கும் சம்பந்தமில்லை. மனிதாபிமானம் உடையவர்கள் எந்த உயர் பதவிக்கு வந்தாலும் மக்கள் சேவையை தலையாய கடைமையாக ஏற்று செயல்படுவார்கள் என்பது அண்ணாமலை போன்றவர்களுக்கு தெரியாது.

என்னை சரித்திர பதிவேடு குற்றவாளி என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஆதாரத்தை காட்டட்டும். ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை இப்படி பேசக்கூடாது” என்று தெரிவித்தார். Minister Sekar Babu condemned

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share