பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்டம்பர் 21) தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், “திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods நிறுவனம் தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது” என்று பாஜக தொழில்துறை பிரிவின் துணை தலைவர் செல்வக்குமார் நேற்று (செப்டம்பர் 20) தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை, பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று விளக்கமளித்திருந்தது.
இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சேகர்பாபு,
“திமுக ஆட்சி அமைந்தவுடன் திருக்கோவில்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் நெய்களை ஆவின் நிர்வாகத்தில் இருந்து தான் வாங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படுவதாகக்கூறி, விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் வினோஜ் பி.செல்வம் ஆகிய இருவர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய் தான் பயன்படுத்தப்படுகிறது. தேவை அதிகமாக இருக்கும் போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம் என்பது இப்போது திருப்பதி லட்டு விவகாரத்தில் புகாருக்குள்ளாகியுள்ள நிறுவனம் அல்ல.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமான பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கு பிறகே பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விநியோகிக்கப்படுகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரான ஆட்சி என்று திசை திருப்ப சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களின் கனவுகளை தகர்த்தெறிய முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Comments are closed.