புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களை கடந்த 200 நாட்களில், 23 லட்சத்து 21 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று (செப்டம்பர் 13) நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் வருகை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது இளைய தலைமுறையினர் கலைஞரின் வரலாற்றினையும், அவரது சாதனைகளையும் ஆர்வத்துடன் பார்வையிடுவதையும், தன்புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் கண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “செய்தித் துறையின் சார்பில் பராமரிக்கப்படக்கூடிய அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டும், மற்றும் கலைஞர் நினைவிடம் முழுமையாக பணிகள் பூர்த்தி செய்யப்பட்டும் கடந்த பிப்ரவரி 26 அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு இன்றுவரை இந்த நினைவிடங்களை சுமார் 200 நாட்களில், ஏறத்தாழ 23 லட்சத்து 21 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டிருக்கின்றார்கள். அதேபோல, கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் இதுவரை பார்வையிட்டிருக்கின்றார்கள்.
கலைஞர் உலகம் அருங்காட்சியகம் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 1,700 நபர்கள் பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்து வரக்கூடியவர்களும் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை ஆர்வத்தோடு பார்வையிட்டு வருகின்றார்கள்.
பொதுமக்களிடம் கலைஞரின் புகழை கொண்டு சேர்க்கும் வகையில், கலைஞர் உலகம் பல தொழில் நுட்பங்களை உள்ளடக்கி வடிமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் இவற்றை பார்வையிட்டு பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிஷ்கிந்தா காண்டம்: விமர்சனம்!
டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் சென்னை ரிட்டர்ன் முதல் ‘விஜய் 69’ படம் அறிவிப்பு வரை!