சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 16 ) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “மத்திய அரசு தரமான அரிசியை கொடுத்தாலும், தமிழக அரசு மக்களுக்கு தரமற்ற அரிசியை வழங்குகிறது” என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள திமுக அரசு அதனை மறைக்க பார்க்கிறது. திமுகவினர் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர் என்று கூறினார்.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (அக்டோபர் 16 ) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ‘தமிழகத்தில் ஆட்சி செய்கின்ற அரசு தரமற்ற அரிசியை கொடுப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
அவர்கள் கொடுக்கின்ற அரிசியை தான் நாங்கள் விநியோகம் செய்கிறோம் அது எப்படி தரமில்லாமல் போகும்” என்று கேள்வியெழுப்பினார்.
இன்று ஞாயிற்று கிழமை அங்காடிகள் அனைத்திற்கும் விடுமுறை. ஆனால் எந்த கடைக்கும் சென்று பார்க்காமல் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
பாஜக வினர் எப்பொழுதும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். தமிழக பாஜகவினர் சொல்வதை கேட்டு மத்திய அமைச்சர் அவ்வாறு பேசியுள்ளார்.
உணவுத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து இன்று மாலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டம் நடத்த இருக்கிறார். அந்த கூட்டத்தில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தால் அதிகாரிகளிடம் கேட்டிருக்கலாம்.
ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது.
தரமான அரிசியை விநியோகிக்க வசதியாக கருப்பு அரிசியை நீக்கும் எந்திரம் 700 ஆலைகளில் பொருத்தப்பட்டுள்ளது. நிறம் பிரித்து தரமற்ற கருப்பு அரிசியை நீக்கிவிட்டு தரமான அரிசியே விநியோகிக்கப்படுகிறது.
அண்மையில் ரேசன் கடைகளை நேரில் பார்வையிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசை பாரட்டினார்.
பல மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரித்த நிலையில் பியூஷ் கோயல் குற்றம்சாட்டி இருப்பது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
76 மத்திய அமைச்சர்களை அனுப்பும் பிரதமர்: அண்ணாமலை தகவல்!
இந்தியை தொடர்ந்து பிற மொழிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பு : அமித் ஷா
