புதிய ரேஷன் கார்டுகள் குறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி இன்று (மார்ச் 21) பதில் அளித்துள்ளார். minister sakkarapani reply on new ration card issue
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஆன்லைன் மட்டுமின்றி படிக்காத முதியவர்களும் புகார் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 18.9 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது புழக்கத்தில் 2.25 கோடி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அதற்கான அட்டைகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கப்படும், ஏற்கெனவே ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் தொலைபேசி புகார் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேஷன் கடைகளில், 6218 கடைகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. திமுக ஆட்சியில் புதிதாக 3,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன ” என்று அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.