அதிமுக பாஜகவை பாதுகாக்கிறது: அமைச்சர் ரகுபதி

Published On:

| By Monisha

minister ragupathi questions edappadi palanisami

காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை அதிமுக பாதுகாக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) கூடியது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தில் பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி ஆகியோர் பதிலளித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இன்றைய தினம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக மீது சுமத்தியிருக்கிறார். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தீர்மானத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். காவிரி விவகாரம் பற்றியும், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றியும், அடிப்படை புரிதல் இல்லாமல் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை பாதுகாக்க வேண்டும் என்று நோக்கத்தில் தான் எடப்பாடி பழனிசாமி இதனை வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவிக்கு அவர் மீது சிறிது பாசம் இருக்கும் என்று சொல்வது வாடிக்கையான ஒன்று. அதே போல பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினாலும் தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் பாஜகவை பாதுகாக்கும் எண்ணத்தை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியது அபத்தமாக உள்ளது.

தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அதை கண்காணிக்க தான் மத்திய அரசின் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இருக்கின்றன.

ADVERTISEMENT

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடும் கர்நாடகாவும் நேரடியாக மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதால் தான் மத்திய அரசின் குழு இயங்கி வருகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா. அதை உணர்ந்தும் தீர்மானத்தில் பாஜக அரசை மட்டும் குறிப்பிட்டுள்ளதை மனம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றாரா?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும். இதை மறைத்து விட்டு பாஜகவின் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்மானத்திற்குத் திருத்தம் கேட்பது என்பது அபத்தமான ஒன்று.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் திமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என்றும் துணிச்சல் மிகுந்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதன் மூலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்குதான் உண்டு என்ற உண்மையை எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில் திமுக துணிச்சலாக செயல்படவில்லை என்ற எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்து தனது துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கலாம். தீர்மானத்தில் நிறைவேற்றியிருப்பதை முழுமையாக படித்துப் பார்க்காமல் மத்திய பாஜக அரசுக்கு முட்டுக் கொடுக்கும் வேகத்தில் உளறி கொட்டியிருக்கிறார்.

சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதிமுக பாஜக ஆகிய 2 கட்சிகளுக்கு தான் எரிச்சலை தந்திருக்கின்றன. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயங்காது என்றும் தற்போது பாஜகவின் பி டீமாக அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏன் கர்நாடக முதல்வரிடம் கேட்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அது போன்று பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என்று நினைக்கும் கர்நாடகாவின் வலையில் நாம் விழுவதற்கு சமமாகும்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்திய பலன் கிடைக்காததால் தான் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடகாவிடம் அடகு வைக்க தான் எடப்பாடி பழனிசாமியின் யோசனை உதவும்.

காவிரியில் நீரை திறந்துவிட்டால் தான் இந்தியா கூட்டணியில் சேருவோம் என்று நிபந்தனை விதித்திருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டணிக்கு சென்ற பழனிசாமி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் தான் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்போம் என நிபந்தனை விதித்திருக்கலாமே” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

‘நான் நிரூபிக்கவா’ , “யாருக்கு துணிச்சல் இல்லை’ : ஸ்டாலின் -எடப்பாடி காரசார விவாதம்!

அன்புமணியை வாழ்த்திய விஜய்

காசாவை கைப்பற்றிய இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share