பாஜகவின் சி டீம்… இதனால் தான் அதிமுவை பற்றி விஜய் வாய்திறக்கவில்லை : அமைச்சர் ரகுபதி பேட்டி!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாஜகவின் சி டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் நேற்று (அக்டோபர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் விஜய் உரையாற்றியபோது,  ‘மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்’ என்று திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தவெக- வின் கொள்கை எதிரி என்றும், திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் நமது அரசியல் எதிரி என்றும் விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை தமிழக மக்களிடத்திலிருந்து அகற்ற முடியாது. இது நேற்று அவர்கள் வெளியிட்டிருந்த ஜெராக்ஸ் காப்பியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் எங்களது கொள்கைகளை யாரும் மக்களிடமிருந்து எடுத்துவிட முடியாது.

காலை உணவு திட்டம் உள்பட உலகத்துக்கே வழிகாட்டும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். தமிழக மக்களின் இதயங்களில் அவருக்கென்று தனி இடம் உண்டு.

உழைப்பின் மற்றொரு வடிவமாக இருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மக்கள் மனதில் இடம் உண்டு.

அரசியல் என்பது இரவு பகல் பார்க்காமல் உழைக்கக்கூடிய ஒன்று. அது போக போக தெரியும்.

இதுவரை பாஜகவின் ஏ-டீம், பி-டீமை பார்த்திருக்கிறோம். விஜய் பாஜகவின் சி-டீம்.

ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில் எடுபடும் என்பதால் ஆளுநரை பற்றி பேசி இருக்கிறார். ஏனென்றால், தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகிருக்கிற ஒருவரை பற்றி புகழ்ந்து பேசினால் அது எடுபடாது. அதனால் ஆளுநரை எதிர்த்து பேசினால் மரியாதை கிடைக்கும் என்பதால் அப்படி பேசியிருக்கிறார். எங்கள் கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது” என்றார்.

அதிமுகவை பற்றி விஜய் பேசாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “அதிமுக தமிழகத்தில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்திருக்கிறது. அதிமுகவில் இருக்கும் தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் குறிக்கோள். ஊழலைப் பற்றி பேசுவதாக இருந்தால் 2011-21 வரையிலான காலகட்டத்தை தான் பேச முடியுமே தவிர, 2021-2026 காலகட்டத்தை பேச முடியாது” என்றார்.

விக்கிரவாண்டி மாநாட்டு கூட்டம் பற்றியும் இளைஞர்கள் வாக்கு சிதறுமா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், திமுகவின் இளைஞர் அணி மாநாட்டுக்கு சுமார் 5 முதல் 8 லட்சம் பேர் வரை வந்தார்கள் என்று பதிலளித்தார்.

முன்னதாக மாநாட்டில் பேசிய விஜய் எங்களை யாராவது ஏ-டீம்அல்லது பி-டீஎம் என்று சொல்லுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி, விஜய் கட்சியை பாஜகவுக்கு சி- டீம் என்று விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விக்கிரவாண்டி மாநாடு : ஊர் திரும்ப முடியாமல் சாலை ஓரங்களில் உறங்கிய மக்கள்!

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share