எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி – விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுகவை தீயசக்தி என்றும் தவெகவை தூய சக்தி என்றும் விஜய் தெரிவித்திருந்த நிலையில் எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் 18ம் தேதி ஈரோடு சரளை பகுதியில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையைக் கூறி திமுகவை காலி செய்தார்கள் அல்லவா. ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்ததுண்டு. இப்போதுதானே புரிகிறது, அவர்கள் இரண்டு பேரும் கூறியதை இப்போது நானும் திரும்பச் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி என ஆவேசம் பொங்க பேசி இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வளவாளம் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாங்கள் தீய சக்தியும் இல்லை தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம் எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி.

விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்கு தான் தெரியும். அவரிடம் தான் கேட்க வேண்டும் நாம்.

ADVERTISEMENT

பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம்.

பாஜகவின் சி டீமாக இருக்கக் கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை அவரை பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அப்படி அரசியலில் உண்மையில் நடக்காது.

ADVERTISEMENT

எம்ஜிஆர் 1972ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன் தான் அவர் கட்சி உறுதியானது.

அதேபோல் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தை காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கும். ஆனால் விஜய் அந்த தேர்தலில் புற முதுகிட்டு ஓடிவிட்டார். தேர்தலையே அவர் கண்டு கொள்ளவில்லை.

எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை. பாஜகவின் சீடீம் தான் விஜய் ” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share