தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல… திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி பேட்டி!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

அதன்படி தீபம் ஏற்ற சென்ற மனுதாரர் ராம ரவிக்குமார் உட்பட யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், “கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படுவது. திருவிழாவை தவிர இந்தியாவில் இருக்க இந்துக்களுடைய பண்டிகை அல்ல. அது தமிழர்களுடைய பண்டிகை. உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்கள் கார்த்திகை திருவிழாவை கொண்டாடுவார்கள். இதுல இந்துத்துவாவுக்கு எந்த வேலையுமே கிடையாது.

ADVERTISEMENT

ஆனால், இப்பொழுது திடீர் என்று திருப்பரங்குன்றத்திலே கார்த்திகை தீபத்தை ஒட்டி ஒரு பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகி அங்கே ஒரு உத்தரவை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

2014 ஆம் ஆண்டு நீதி அரசர்கள் பவானி சுப்பராயனும், அதைப்போல நீதி அரசர் கல்யாணசுந்தரமும் அவர்களும் 2014 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பைத் தந்திருக்கிறார்கள்.

எந்த இடத்திலே வழக்கப்படி ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ கார்த்திகை தீபத்தை, அதே இடத்திலே தான் ஏற்ற வேண்டும் என்று 2014-லேயே தீர்ப்பு வந்திருக்கிறது.

ஆனால், அதை புரிந்து கொள்ளாதவர்கள், அறிந்து கொள்ளாதவர்கள், அதைப்பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்ததைப் போல, நேற்று முன்தினம் நீதிமன்றத்தை அணுகி, எங்களுக்கு கார்த்திகை தீபத்தை விளக்கேற்றுவதற்கு அனுமதி வேண்டும் என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டு கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அந்த நீதிபதியும் தீர்ப்பை தந்திருக்கிறார். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், நீதிக்குத் தலை வணங்குபவர்கள். எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சரைப் போல சட்டத்தை மதிக்கக் கூடிய ஒருவர் இந்தியாவிலேயே கிடையாது.

அந்த அளவுக்கு சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவர். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர். எனவே, 2014ல் இரண்டு நீதிபதிகள் , அதாவது டிவிஷன் பெஞ்ச் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பின் மீது மேல்முறையீடு இல்லாமலோ, புதிதாக ஒரு தனி நீதிபதியை வைத்து தீர்ப்பை வாங்கிக் கொண்டு வந்து நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டால் எப்படி நிறைவேற்ற அனுமதிக்க முடியும்?

எனவே 2014 தீர்ப்பின்படி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார். 2014 தீர்ப்பினுடைய அடிப்படையிலே எந்த வழக்கையும் தொடர்வதற்கு தமிழக அரசுக்கு உரிமை உண்டு.

2014 தீர்ப்பைப் பார்க்காமல், படித்துப் பார்க்காமல், அப்படி ஒரு தீர்ப்பு இருக்கிறதே தெரியாமல், எல்லா விஷயத்தையும் நீதிமன்றத்திலே மறைத்துவிட்டு, புதுசா ஒரு கதையைக் கட்டிவிட்டுட்டுப் போனால், அதை மக்கள் நம்புவார்களா? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதை பற்றி சட்டத்துறை மூலமாக ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமிக்கு வேற வேலையே கிடையாது. தமிழ்நாடு அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய வேலை. இந்த சம்பவத்தையும் அவர் எடுத்துக்கொண்டு இதிலே தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியவர், இந்துத்துவாவினுடைய கைக்கூலிகளுக்கு அடிமையாக இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலமாக நிரூபித்திருக்கின்றார்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share