மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இன்று (நவம்பர் 15) விலகியுள்ளார்.
2001-2006-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் 2009-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாக எந்த ஒரு காரணமும் குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி ஒப்புதலை பெற்று வேறு நீதிபதி அமர்வில் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…