முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி கூட்டாட்சித் தத்துவத்தின் சாம்பியனாக இருந்தார் என்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் கூறினார்.
டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று கர்நாடக மாநில முதல்வர் போராட்டம் நடத்திய நிலையில், இன்று (பிப்ரவரி 8) கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சமாக நிதி ஒதுக்குவதாக கூறி அதனை கண்டித்து இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் கருஞ்சட்டை அணிந்து தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன், “மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் ,தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
மத்திய அரசு திட்டங்களில் 20 சதவிகிதம் தான் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. மீதம் 80 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பாகும். இப்படி இருக்கையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு பிரதமர் மோடியின் பெயரை போட சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். இல்லையென்றால் அவர்களது பங்களிப்பாக 20 சதவிகிதமும் குறைக்கப்படுகிறது” என்று கூறினார்.
கூட்டாட்சித் தத்துவத்துக்காக அண்ணா, கலைஞர் ஆகியோர் தொடர்ந்து போராடினார்கள். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்.
கூட்டாட்சி என்பது மாநிலங்களின் உரிமை என்பதில் எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தார். இதை நான் இங்கு சொல்லியாக வேண்டும்.
நரேந்திர மோடி என்ற கூட்டாட்சி தத்துவத்தின் தலைசிறந்த சாம்பியன் ஒருவர் இருந்தார், குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த போது கூட்டாட்சித் தத்துவத்தின் தலைச்சிறந்த சாம்பியனாக இருந்தார். ஆனால், இருக்கைகள் மாறுகிறது. மனிதர்கள் மாறுகிறார்கள். எதுவுமே நிரந்தரம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அநீதி அதிகரிக்க அதிகரிக்க போராட்டமும் அதிகரிக்கும்” என்று கூறினார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Propose Day 2024 : தமிழ் சினிமாவின் டாப் 10 காதல் வசனங்கள்!
ஐந்து பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பதட்டத்தில் தமிழகம்!