கிரிக்கெட் சங்கத் தேர்தல்: அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு!

Published On:

| By christopher

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மருத்துவர் அசோக் சிகாமணி போட்டியின்றி இன்று (நவம்பர் 5) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தேர்தலில் தலைவராக இருந்த ரூபா குருநாத் பதவி விலகிய நிலையில் அடுத்த தலைவருக்கான தேர்தலில் மருத்துவர் அசோக் சிகாமணி மற்றும் பிரபு ஆகியோர் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் விதமாக இன்று தேர்தல் நடைபெற்றது.

ஆனால் எதிர்பாராதவிதமாக அசோக் சிகாமணியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிரபு தனது மனுவை பொதுக்குழுவில் வாபஸ் பெற்றார்.

ADVERTISEMENT

இதன் மூலம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செயலாளராக அவரது அணியைச் சேர்ந்த ஆர்.ஐ.பழனி என்பவரும், துணை செயலாளராக பாபா என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
minister ponmudy son ashok sigamni in TNCA election

யார் இந்த அசோக் சிகாமணி?

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் சிகாமணி, தமிழகத்தில் அனைவருக்கும் மிக பரிட்சையமான திமுக அமைச்சரான பொன்முடியின் இளைய மகன் ஆவார்.

அசோக் சிகாமணி தற்போது சென்னை கே.கே.நகரில் குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தி வருகிறார். எனினும் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது தீராப்பிரியம் கொண்ட அசோக் அதன் மீதான தேடலால் இந்திய அணியில் இடம்பெறும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் முடியவில்லை.

பின்னர் விழுப்புரம் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியிலும் அசோக் இருந்திருக்கிறார்.

கடந்த 2019 ல் நடந்த தேர்தலிலேயே எப்படியாவது தலைவராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர் தான் அசோக் சிகாமணி.

minister ponmudy son ashok sigamni in TNCA election

சீனிவாசனின் ஆதிக்கம்!

எனினும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் 15 முறை தலைவராக இருந்த இந்தியா சிமெண்ட் நிறுவனரான சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனரான சீனிவாசன் டிஎன்சிஏவின் தலைவராக மட்டுமின்றி ஐசிசி மற்றும் பிசிசிஐ-ன் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

பின்னர் லோதா கமிட்டி விதித்த கடுமையான கட்டுப்பாட்டுகளால் அவரால் அடுத்தடுத்து என பதவியில் தொடரமுடியவில்லை.

தான் பதவியில் இல்லாவிட்டாலும், தனக்கு வேண்டியவர்கள் பதவியில் இருக்கும் போது ஒரு முடிசூடா மன்னராகத் திகழ முடியுமென்பதால் தன் மகளையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவராக்கினார் சீனிவாசன்.

minister ponmudy son ashok sigamni in TNCA election

அசோக் சிகாமணிக்கு பெரும் ஆதரவு!

தற்போது ரூபா குருநாத்தும் பதவி விலகிய நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட தனது ஆதரவினை தெரிவித்தார் சீனிவாசன்.

அதுமட்டுமின்றி தலைவர் பதவியில் வெற்றி பெற அசோக் சிகாமணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் சிபாரிசும் அதிகம் இருந்ததாகவும் சங்கத்தில் பேச்சு எழுந்தது.

அதன்படியே தற்போது போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி.

பவித்ரா பாலசுப்ரமணியன்

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்!

கரகாட்டத்தில் நாகரிகமான உடை: நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share