அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை பொன்முடி தரப்புக்கு வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 8) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்தது.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோரை வேலூர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா விடுவித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். அவர் நிர்வாக ரீதியாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதி தனது விளக்கத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்கக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, பொன்முடி தரப்பு கோரிக்கையை ஏற்று வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
அதுபோன்று வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் எடுத்த நிர்வாக முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கேட்டும், உயர் நீதிமன்ற பதிவாளரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கக் கோரிக்கை வைத்தும் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமைப் பதிவாளரை எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டார். வழக்கை விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு மாற்ற எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்குவது தொடர்பாகத் தலைமை பதிவாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதானிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? – மஹூவா மொய்த்ரா ஆவேசம்!
‘உங்க அம்மா, அப்பா வெட்கப்படணும்’ நேரடியாக மோதிக்கொண்ட விஷ்ணு-விசித்ரா!