சொத்துக்குவிப்பு வழக்கு, செம்மண் குவாரி வழக்கு ஆகியவை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
1996-2001 வரை திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி ரூபாய் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 2002 மார்ச் 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. கடந்த ஜூன் 28ஆம் தேதி நீதிபதி வசந்த லீலா தீர்ப்பு வழங்கினார். போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு, அமைச்சர் பொன்முடிக்கு சற்று நிம்மதியை கொடுத்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391ஆவது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் பொன்முடி வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “வேலூர் நீதிமன்றத்தில் மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது. அதனால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என்று கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதுதவிர 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அனுமதிக்கப்பட்ட அளவை விட செம்மண் குவாரிகளில் மண் எடுக்க அனுமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு ஆகஸ்ட் 22 விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பூரணி அம்மாள் விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “அமலாக்கத் துறை செம்மண் குவாரி வழக்கில் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை 17ஆம் தேதி சோதனை நடத்தியது நினைவிருக்கிறதா? அப்போது வெளிநாட்டு கரன்சிகள் உட்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. அந்த சோதனையின்போது கிடைத்த சில தகவல்கள் அமலாக்கத்துறையையே அதிர வைத்திருக்கின்றன. நீதித்துறையைச் சேர்ந்த சிலர் பற்றிய முக்கிய விஷயங்களும் அந்த சோதனையின்போது கிடைத்திருக்கின்றன. எதிர்பாராமல் கிடைத்த அந்த விஷயங்களை அப்படியே டெல்லிக்கு அனுப்பி உரியவர்களிடம் சேர்த்துள்ளது அமலாக்கத்துறை.
இது தவிர நீதிமன்றம் தொடர்பாக நிர்வாக ரீதியான விஷயங்களை கண்காணிக்கும் ‘கோர்ட் விஜிலன்ஸ்’ மூலம் சில தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதுவும் மத்திய உளவுத் துறையால் ஸ்மெல் செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் விளைவாகத்தான் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலை தொடர்பான சில அறிவுறுத்தல்கள் டெல்லியிடம் இருந்து வந்துள்ளன. அதன் பிறகே அடுத்தடுத்த நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன” என்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது பொன்முடியைப் போலவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதையும் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேந்தன், பிரியா
நல வாரியம்: முதல்வரை சந்தித்த உணவு டெலிவரி தொழிலாளர்கள்!
திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
