13 மணி நேர சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
2006-2011ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த , தற்போதைய உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரிகளில் இருந்து மண் அள்ள அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீதும் அவரது மகன் மீதும் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 2012ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தசூழலில் அமலாக்கத் துறை இன்று அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் 13 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியது.
இந்த சோதனையை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரிடம் சில பேப்பரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதாக கூறப்படும் நிலையில், ‘உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்து ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று அழைத்து சென்றிருக்கின்றனர்.
அமைச்சர் பொன்முடி தனது காரிலேயே அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதைபற்றி தமிழக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்…
“பொதுவாக அமலாக்கத் துறையினர் ரெய்டு செய்தால் ஆதாரங்களை ஆராய்வார்கள். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான முக்கியமான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவரிடம் விசாரணை செய்துவிட்டு, நாங்கள் விசாரணைக்கு அழைக்கும் போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அழைத்த நேரத்துக்கு வர வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு செல்வார்கள்.
கைது செய்யும் நோக்கத்துடன் வந்தால் வீடு அலுவலகங்களில் ரெய்டு செய்துவிட்டு ஆவணங்கள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துகொண்டு விசாரணை என்று அருகில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்படிதான் அமைச்சர் பொன்முடியை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றிருக்கின்றனர்.
அமலாக்கத் துறையினர் அமைச்சரை கஸ்டடியில் எடுத்ததில் இருந்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும். அதனால் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று ரிமாண்ட் செய்வதற்கான நீதிமன்ற அடைப்பு காவல் அறிக்கையை (remand report) தயார் செய்வார்கள். அதில் அமைச்சரிடமும் கையெழுத்து பெறுவார்கள். அதோடு அமைச்சரை கைது செய்வதாக தகவல் தெரிவித்து அவருடன் வந்தவரிடமும் கையெழுத்து பெறுவார்கள். பின்னர் அமைச்சர் உடல் நிலை எப்படி இருக்கிறது என மருத்துவ சோதனை செய்வதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை சான்று பெறுவார்கள். அதன்பிறகு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்.

அதனால் தான் திட்டமிட்டு விசாரணை என்று அலுவலகத்துக்கு அழைத்து சென்று அமைச்சர் பொன்முடியை கைது செய்ய உள்ளனர்” என்று கூறுகிறார்கள்.
முன்னதாக, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்றார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக அமைச்சர்களே ஊழல் வழக்கில் கைதாகி வருகிறார்கள்’ என்கிறார்கள் அதிமுக மாஜிக்கள்.
வணங்காமுடி, பிரியா
