மத்திய நீர்வளத்துறை இணையமைச்சரான சோமண்ணாவை நீக்கக்கோரி தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இன்று (ஜூன் 11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம்
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று (ஜூன் 11) அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்சனை
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் காவிரி நதிநீர் பிரச்சனை முடிவுக்கு வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் காவிரியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது தான்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அமல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கர்நாடகா, தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதில் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் காவேரி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விதத்தில் கர்நாடகா காவிரிக்குக் குறுக்கே மேகதாது அணையை கட்ட தீவிரமாக முயற்சித்து வருகிறது.
சோமண்ணாவை நீக்கக்கோரி தீர்மானம்
இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றனர்.
இதில், நீர்வளத்துறை அமைச்சராக குஜராத்தைச் சேர்ந்த சி.ஆர்.பாட்டில் நியமிக்கப்பட்டார். மேலும், நீர்வளத்துறையின் இணையமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா நியமிக்கப்பட்டார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகள் கர்நாடகாவுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட இதனால் வாய்ப்புள்ளது.
இந்த அடிப்படையில் இன்று நடைபெற்ற தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், மத்திய நீர்வளத்துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடகாவின் சோமண்ணாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய இணையமைச்சராக எல்.முருகன், சுரேஷ் கோபி பொறுப்பேற்றனர்!
Comments are closed.