காரை அனுப்பிவிட்டு அமைச்சர் நேரு செய்த செயல் : ஆச்சரியத்தில் பார்த்த மக்கள்!

Published On:

| By Kavi

 நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தனது காரையும் பாதுகாப்பு வாகனத்தையும் அனுப்பிவிட்டு, திருச்சியில் இரவு நேரத்தில் நடந்து சென்றது தமிழக அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.

திருச்சியில் திமுக மூத்த நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு நேற்று பங்கேற்றார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியில் வந்த அமைச்சர் நேரு தனது கார், மற்றும் பாதுகாப்பு வாகனத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நடக்க புறப்பட்டார். அவருடன் மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமுவும் சென்றார்.

அமைச்சர் நேரு, உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் சாலை வழியாக தில்லைநகர் பகுதியிலுள்ள தனது வீடு வரை நடந்தே சென்றுள்ளார்.

ADVERTISEMENT

வழியில் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்திய அமைச்சர், பொதுமக்களிடம் சகஜமாக உரையாடினார்.

மக்களிடம் நலம் விசாரித்துவிட்டு, திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது எனவும் கேட்டறிந்தார். அதுபோன்று தன்னுடன் வந்தவர்களுடன் தேர்தலில் எப்படியெல்லாம் வேலை செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார்.

ADVERTISEMENT

அமைச்சர், திமுகவின் முதன்மை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் பிஸியாக இருக்கும் கே.என்.நேரு எளிமையாக நடந்து சென்றது அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடு நடந்ததாக தமிழக டிஜிபிக்கு இரண்டு கடிதங்களை அமலாக்கத் துறை அனுப்பியது.

இதற்கு, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறிய அமைச்சர் நேரு, தனது துறை சாதனைகளையும் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share