அமைச்சர் நேரு சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள “TRUEDOM EPC INDIA” நிறுவனம் 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. தொடர்ந்து இந்த பணத்தை இந்நிறுவனம் தனது சகோதர நிறுவனங்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் இதன் மூலம் வங்கிக்கு 22.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 2021 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி பல இடங்களில் சோதனை மேற்கொண்டது.
இதனிடையே எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிபிஐ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு இன்று (ஏப்ரல் 15) நீதிபதி எம் நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜரானார்.
அவர், “சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. எனவே சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரும் வழக்கில் அமலாக்கத் துறையையும் இணைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தங்களது அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காகவே அமலாக்கத்துறை இதுபோன்று நடவடிக்கை எடுக்கிறது” என்றும் குற்றம்சாட்டினர்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டப்படியே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதத்தை முன் வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள சிபிஐ வழக்கு விசாரணைக்கும் தடை விதித்தார்.
இதனால் அமலாக்கத் துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
