பத்திரப்பதிவு முறைகேடுக்கு 3 ஆண்டுகள் சிறை: அமைச்சர் மூர்த்தி

Published On:

| By Balaji

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாரதியார் நினைவு நாள் இன்று(செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாளையொட்டி அவர் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “அதிமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 2016ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்து, அது உண்மை என்று நிரூப்பிக்கப்பட்டால், சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு,மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டு வரப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் காரணமாகவே இந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்படும்” என்று கூறினார்.

ADVERTISEMENT

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share