நேற்று முன் தினம் போன் போட்ட ஸ்டாலின்… இன்று கவிதை மாணவிக்கு போன் கொடுத்த எம்.ஆர்.கே

Published On:

| By vanangamudi

தனது படிப்புக்கு முதல்வர் ஸ்டாலினிடம் உதவி கேட்ட கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி தொப்பிளிக்குப்பத்தைச் சேர்ந்த மாணவி ஜனனிக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 24) ஆண்ட்ராய்டு மொபைல் போனை பரிசாக வழங்கினார். MRK Panneerselvam gift mobile

பிப்ரவரி 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பிப்ரவரி 22-ஆம் தேதி திருப்பயரில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நெய்வேலி கெஸ்ட் ஹவுஸில் இருந்து ஸ்டாலின் காலையில் புறப்பட்டார்.

ஸ்டாலின் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கடலூர் ஜவஹர் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஜனனி ‘முதல்வர் அப்பா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு’ என்று தான் எழுதிய கவிதையை ஸ்டாலினிடம் கொடுத்தார்.

இந்த கவிதையை படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்த ஸ்டாலின், ஜனனியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ஸ்டாலினுடன் போட்டோ எடுக்க விரும்பியதாகவும் ஆனால், தன்னிடம் மொபைல் போன் இல்லாததால் போட்டோ எடுக்க முடியவில்லை என்று ஜனனி வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

மேலும், ஸ்டாலினிடம் பேசிய ஜனனியின் தாயார் உஷா ராணி தங்களது குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் என்று ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தார். ஸ்டாலினும், “படிப்பு விஷயத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. நாங்க படிக்க வைக்கிறோம்” என்று மாணவி மற்றும் அவரது தாயாருக்கு உறுதியளித்தார். இதுதொடர்பாக மின்னம்பலத்தில் நேற்று (பிப்ரவரி 23) மாணவிக்கு திடீர் போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்… என்ன நடந்தது? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியை அறிந்த, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனது கட்சிக்காரர்களிடம் பேசி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற கட்சி அலுவலகத்திற்கு மாணவி ஜனனியை அழைத்து வர சொன்னார்.

அதன்படி மாணவி ஜனனி அவரது பெற்றோர்கள் சஞ்சீவ் காந்தி, உஷா ராணி ஆகியோர் சட்டமன்ற அலுவலகத்திற்கு இன்று சென்றனர். மாணவியிடம் நலம் விசாரித்த எம்.ஆர்.கே, “நல்லா படிக்கணும். படிப்பு விஷயத்துல என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க. நாங்கள் செஞ்சி தர்றோம்” என்று உறுதியளித்தார். தொடர்ந்து, மாணவிக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போனை பரிசாக வழங்கினார். பின்னர் மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு பிரியாணி, தயிர் சாதம் பரிமாறப்பட்டது.

அமைச்சருக்கு நன்றி தெரிவித்துவிட்டு மாணவி அங்கிருந்து கிளம்பும்போது, கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளரும் அமைச்சரின் மகனுமான கதிரவன் மாணவியிடம், “இந்த வருஷம் காலேஜ் ஃபீஸ் கட்டியாச்சா?” என்று கேட்டார்.

அதற்கு மாணவி, “இந்த வருஷம் ஃபீஸ் கட்டியாச்சு சார். இனி அடுத்த வருஷம் தான் கட்டணும்” என்றார். “எப்போது ஃபீஸ் கட்டணும்னாலும் கேளுங்க. கண்டிப்பா நாங்கள் உதவி செய்கிறோம்” என்று மாணவிக்கு நம்பிக்கையளித்தார் கதிரவன். அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு ஜனனி மற்றும் அவரது பெற்றோர் அங்கிருந்து விடைபெற்றனர். MRK Panneerselvam gift mobile

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share