வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத் துறை சார்பில் கோடைக்கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இதை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
“கோடை வெப்பம் தாக்க தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு சுய நினைவு இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெப்ப தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவைகளும் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக் காய்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை அணிய வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், திறந்தவெளியில் வேலை பார்ப்பவர்கள், இதயநோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வெயில் காலங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
வெளியில் செல்லும்போது மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையற்று தோல் உலர்ந்து காணப்படுதல் போன்ற அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 அவசர எண்ணை அழைத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்.
உதவிக்காக காத்திருக்கும்போது அந்த நபரை உடனடியாக குளிர்விக்கவும், முடிந்தால் குளிர்ந்த இடத்துக்கு நகர்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத்துறையும், அடக்குமுறையும்! சீரழியும் மக்களாட்சி விழுமியங்கள்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : கொத்தமல்லி கார பால்ஸ்
GT Vs MI: எங்களுக்கெல்லாம் ‘ஜாலியா’ தான் இருக்கு… ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!