“காதி பொருட்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும்” – எல்.முருகன் வேண்டுகோள்!

Published On:

| By Selvam

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட நூற்றாண்டு விழா கட்டிடத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட காதி பவனை மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று (செப்டம்பர் 1) திறந்துவைத்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 20 கைவினைஞர்களுக்கு ஊதுபத்தி (அகர்பத்தி) தயாரிக்க தானியங்கி  இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், கிராமத் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 பிளம்பர்கள், 20 எலக்ட்ரீஷியன்களுக்கு உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,  ” காதி பவன் மூலம் கிராமப்புற மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. உள்நாட்டு காதி தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’ என்ற இயக்கத்தில் இணையவேண்டும்.

கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கும், கைவினைஞர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் பிரதமர் மோடி தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறார். அனைவரும் காதி பொருட்களை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் நெசவாளர்கள் பயனடைவார்கள், கிராமப்புற பொருளாதாரம் உயரும்” என்றார்.

கைவினைஞர்களிடையே உரையாற்றிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார், “தமிழ்நாட்டில் 74 காதி நிறுவனங்கள் மூலம் 11,000-க்கும் அதிகமான  கைவினைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், சென்னையில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில அலுவலகம் மூலம் பிரதமரின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 191 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 6,508 அலகுகள் நிறுவப்பட்டு 52,000-க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘அஃப்ரெய்ட்’: விமர்சனம்!

ஆந்திரா, தெலங்கானாவை புரட்டி போட்ட வெள்ளம்… தவிக்கும் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share