தமிழ்நாட்டின் முக்கியமான துறைகளில் தலையாயது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.
ஒவ்வொரு நொடியும் மக்களோடு தொடர்புடைய இந்தத் துறையை 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரிடம் கொடுத்தார் என்றால் திருச்சி மலைக்கோட்டையில் இருந்து வெற்றி பெற்றுவந்த மாண்புமிகு கே.என்.நேருவிடம் கொடுத்தார்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் நம்பிக்கை வைத்து கே.என்.நேருவிடம் 1989-91 ஆட்சியில் மின்சாரம், பால் வளம், தொழிலாளர் நலம் ஆகிய துறைகளைக் கொடுத்தார். அதன் பின் 1996-2001 ஆட்சியில் உணவு, பொது விநியோகம், கூட்டுறவு ஆகிய துறைகளைக் கொடுத்தார். 2006-11 ஆட்சியில் போக்குவரத்துத் துறையை நேருவிடம் கொடுத்தார்.
அந்த வரிசையில் 2021 இல் திமுக ஆட்சி அமைந்ததும் கே.என்.நேருவிடம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையைக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதாவது மக்களோடு அன்றாடம் நொடிக்கு நொடி நேரடித் தொடர்புடைய அத்தியாவசிய துறைகளை கே.என்.நேருவிடம் கொடுப்பதில் கலைஞர், ஸ்டாலின் ஆகிய இருவருமே ஒரே எண்ண ஓட்டத்தில்தான் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர் நேரு. மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேருக்கு நேராக சந்திப்பதில் மகிழ்ச்சி காண்பவர் என்பதால், நேரு என்ற பெயர் இவருக்கு பெரும் பொருத்தமானது என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
இந்த வகையில்தான் 2021 திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகமும் குடிநீர் வழங்கலும் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 48.45 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில்தான் வாழ்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டின் 7.21 கோடி மக்கள் தொகையில் 3.50 கோடி மக்கள் தற்போது நகரப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இந்தியாவிலேயே வேகமான நகரமயமாதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டைத் தேடிவரும் தொழிற்சாலைகள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவைதான் இதற்குக் காரணம்.
இத்தகைய நிலையில் நகரமயமாகி வரும் தமிழ்நாட்டுக்கு ஏற்ற நகர நிர்வாகத்தை அதாவது நகரங்களில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும்.
அதேபோல மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.
இப்படி உள்ளும் புறமும் மக்களை கவனிக்க வேண்டிய மக்களை திருப்திப்படுத்த வேண்டிய முக்கியமான துறை நேருவின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான்… பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதிகள், குடிசை வீடுகளை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை உலக வங்கி உதவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் செய்து வருகிறார் அமைச்சர் நேரு.
தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-III, மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியம் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி போன்ற வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் 9 மாநகராட்சிகள் மற்றும் 12 மூன்றாம் நிலை நகராட்சிகள் உட்பட 150 நகராட்சிகளும் உள்ளன. நகராட்சிகளின் நிலை ஆண்டு வருவாய் / மக்கட் தொகை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
தற்போது கோடை மழை பொழிந்தாலும் வெயில் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது.
கோடை மழைக்கு முன்னதாகவே கடந்த ஏப்ரல் இறுதி வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர், “தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விடக் குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கக்கூடிய நிலையில், இந்த முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்திட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் முக்கிய துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை, அறிவுறுத்தலின்படி கே.என்.நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சிறப்பாக செயல்பட்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத கோடையாக 2024 கோடையைக் கடந்திருக்கிறது.
ஆங்காங்கே கோடைக்கே உரிய சிறுசிறு இயல்பான பிரச்சினைகள் இருந்தாலும்… பெரிய அளவுக்கான குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்பது ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில்’ இருந்தபோதும் தமிழ்நாட்டு மக்களுடன் அமைச்சர் நேரு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம்!
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்