வசதி இல்லாதவர்களுக்கு சொத்துவரியை ஏற்றவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார்.
அதன் பிறகு செய்தியாளார்களைச் சந்தித்த அவரிடம் திருச்சியில் சொத்து வரி அதிகளவு உயர்த்தப்பட்டிருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “கடந்த 10, 15 ஆண்டு காலம் சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. திடீரென வரியை உயர்த்தினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று புதிய வழிமுறையை நகராட்சி துறை எடுத்தது.
600 சதுர அடிக்கு கீழே உள்ளவர்களுக்கு சொத்து வரி உயர்வு இல்லை. 600ல் இருந்து, 1200 சதுரடி உள்ள இடங்களுக்கு 25 – 35 சதவீதம் என்றும், 1,200 சதுர அடியில் இருந்து, 1,800 சதுரஅடி வரை 50 சதவீதம் என்றும், 1,800ல் இருந்து, 2,400 சதுர அடி வரை 70 -75 சதவீதம் என்றும், அதற்கும் மேல் அதிக வசதிபடைத்தவர்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்த்த சட்டம் போடப்பட்டுள்ளது. சில சமயங்களில் அதாவது இயற்கை பேரிடர் மற்றும் மழைக் காலங்களில் அதை நிறுத்தி வைப்பது அரசாங்கத்தின் வழக்கம்.
மாநகராட்சியை பொறுத்தவரை வசதி இல்லாதவர்களுக்கு சொத்துவரியை ஏற்றவில்லை” என்றார்.
மேலும் அவரிடம் திருச்சியில் நடைபெறும் சாலை பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். மழைக்காலத்தில் சாலை அமைத்தால் சரியாக இருக்காது, சேதமாகிவிடும் என்பதால் புதிய சாலை அமைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறது.
கோவை, ஆவடி மாநகராட்சிகளைத் தொடர்ந்து திருச்சியிலும் வீடு, வணிக நிறுவனங்களுக்கு மீட்டர் வைத்து 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு, “ தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள்” என்றார்.
திருச்சிக்கு ஆய்வுக் கூட்டம் நடத்த தமிழக முதல்வர் விரைவில் வருவதாக கூறியிருப்பதாகவும் தெரிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தமிழ்நாடு மின்சார வாரியம் – அதானி நிறுவனம் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை: செந்தில் பாலாஜி