இந்த ஆண்டு 375 ஊராட்சிகள் நகராட்சியில் சேர்க்கப்பட்டாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளார். Nehru announced days work
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், “தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. நல்லம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தடங்கம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லெக்கம்பட்டி, சோகத்தூர் பகுதிகள் நகராட்சிகளுடன் இணைக்க வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
ஏனென்றால், கிராம ஊராட்சியில் நிறைய விவசாய நிலங்கள் இருக்கிறது. அதனால் விவசாய நிலங்களை நகராட்சிகளுடன் இணைத்தால் பிளாட் போட்டு விற்பனை செய்துவிடுவார்கள் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, கிராம மக்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,”இது அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி. பல இடங்களில் பேரூராட்சிகளை நகராட்சிகளாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
ஊராட்சிகளை பொறுத்தவரை, 100 நாள் வேலை திட்டம் கிடைக்காமல் போகும் என்பதால் ஊராட்சி பகுதிகளை நகராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டு 375 ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகிறது. 375 ஊராட்சிகள் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொடுக்க முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். Nehru announced days work