சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இன்றைக்கு (ஜூலை 20) ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவரது மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
-வேந்தன்
