“தாம் அழுத்தத்துக்கு பயப்பட மாட்டேன்” என தவெக தலைவர் விஜய் பேசியதை திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் நாள் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், “அழுத்தத்துக்கு நானா பயப்படுவேன்? ஒரு காலத்திலும் பயப்பட மாட்டேன்..” என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார்.
இதே விஜய், ஜெயலலிதாவிடம் எப்படி கை கட்டி நின்றார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியிட முடியாமல் போனதற்காக, ஜெயலலிதாவை சந்தித்து, “உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் எதிரி இல்லை” என்று அழுத்தத்துக்கு பயந்து தந்தையுடன் கை கட்டி நின்றவர்தான் விஜய். அவர்தான் இன்று வீரவசனம் பேசுகிறார்.
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி, NDA கூட்டணி என்றுதான் சொன்னாரே தவிர ஒரு முறை கூட அதிமுக கூட்டணி என சொல்லவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, நான் முதலமைச்சர் என்கிறார்.. அதை பாஜக ஏற்றுக் கொண்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை. அது பொருந்தா கூட்டணி.. அந்த கூட்டணி, திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம், Bye Bye Stalin என்கிறார்கள்.. Bye Bye அல்ல தம்பி.. Welcome Stalin என தமிழக மக்கள்
அழைக்கிறார்கள்.
தனித் தனியாக நிற்கும் போது திமுகதான் ஜெயிக்கும் என்பதுதான் தமிழ்நாட்டின் சரித்திரம்… மும்முனைப் போட்டி வந்தாலும் திமுகதான் ஜெயிக்கும்.. இதுதான் கடந்த கால வரலாறு. உங்களால் ஜெயிக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
