அமைச்சர் ஐ பெரியசாமியின் மனுக்களை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. minister i periyasami plea rejected
2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ஆம் தேதி எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கை தினம்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் குற்றம்சட்டப்பட்ட கணேசன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோர் நேரில் ஆஜராகி,
உயர்நீதிமன்ற உத்தரவு படி ஒரு லட்சம் ருபாய்க்கான பிணை தொகைக்கான உத்தரவாதம், இரு நபர் உத்தரவாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை.
அவரது தரப்பில், “சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற விசாரணை நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, “உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி விசாரணையை தள்ளிவைக்க முடியும்” என கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், விசாரணையை தள்ளிவைக்க கோரியும் ஐ. பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி பிணை செலுத்தாதது குறித்து உயர் நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயவேல் விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா