அமலாக்கத் துறைக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 2006 – 2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
ஆனால், போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி உள்ளிட்டோரை திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில், திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தசூழலில் அமலாக்கத் துறையும் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஐ.பெரியசாமி தொடர்புடைய வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை.
தொடர்ந்து, சொத்துக்கள் முடக்கம் தொடா்பாக விளக்கம் கேட்டு ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்ய கோரியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று ஐ.பெரியசாமி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது இந்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் இன்று (ஜனவரி 5) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற விசாரணைக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அமலாக்கத் துறை விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என்பதால் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கலாம்” என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
