மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் டிசம்பர் 14ஆம் தேதி புதிய அமைச்சராக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். புதிய அமைச்சரோடு சில அமைச்சர்களுக்கு துறை ரீதியான மாற்றங்களும் நடக்க இருக்கின்றன. இது பற்றி மின்னம்பலத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த 2, 3 தினங்களாகவே சீனியர் அமைச்சர்கள் உட்பட பல்வேறு அமைச்சர்களும் யார் யாருக்கு எந்த துறை மாற்றப்பட இருக்கிறது என்பது பற்றி சஸ்பென்ஸோடு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அமைச்சரவை மாற்றம் என அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்ததிலிருந்தே தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் தனக்கு மீண்டும் வளமான துறையைப் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரான ராஜகண்ணப்பன் திமுக ஆட்சி அமைந்தபோது முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று போக்குவரத்துத் துறையை பெற்றார். அந்தத் துறையில் அவர் மீது நிதி ரீதியான புகார்கள் கிளம்பின. அந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தனது முதுகுளத்தூர் தொகுதியில் பிடிஓ அதிகாரியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக சர்ச்சைக்கு ஆளானார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

அதையடுத்து அவர் வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை அவரிடமிருந்து பறித்து அதை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சிவசங்கரிடம் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். சிவசங்கரிடம் அதுவரை இருந்த லோ பட்ஜெட் துறையான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை கண்ணப்பனிடம் கொடுத்தார் முதல்வர். பல்லைக் கடித்துக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் கண்ணப்பன் மீண்டும் அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் வந்ததும் தனக்கு வலிமையான துறையை பெறுவதற்கான வழிகளில் இறங்கினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு நிறைய செலவழித்திருப்பதாகவும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை வேண்டும் என்றும் ராஜகண்ணப்பன் ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே வலியுறுத்திவந்தார். இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது கைத்தறி, துணிநூல் மற்றும் காதி துறையை நிர்வகித்து வரும் ராணிப்பேட்டை காந்தியிடமிருந்து காதி துறையை மட்டும் பிரித்து கண்ணப்பனிடம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்கிறார்கள் கோட்டைக் குருவிகள்.
–வேந்தன்
பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு: நீதிபதி விலகல்!