சசிகலா சொத்து விவரங்கள் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா பணமதிப்பழிப்பின்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி 1654.50 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கியதாகவும் 237 கோடி ரூபாய் கடனாக அளித்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சசிகலாதான் உரிமையாளர் என அவரது ஆடிட்டர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை கூறியுள்ளது.
சசிகலா சேர்த்த சொத்துக்கள் தொடர்பாகவும், அதுதொடர்பான பணப்பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு சசிகலா உரிமை கொண்டாடுகிறார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சேர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சரோ, “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் விரிவாக விவாதிக்க முடியாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில் 1911 கோடி ரூபாய்க்கு அளவுக்கு சசிகலா சொத்துக்கள் வாங்கிக் குவித்தது வருத்தப்படக் கூடிய விஷயமாக உள்ளது. எந்த அளவுக்கு சசிகலா, தினகரன் உள்ளிட்ட மாபியா கும்பல் பணத்தை மாற்றுவதில் குறியாக இருந்துள்ளனர் என்பதற்கு வருமான வரித் துறை சாட்சியாக உள்ளது” என்று சாடினார்.
இதற்கு பின்னால் பெரிய புள்ளிகள் இருப்பார்கள் என்ற கே.எஸ்.அழகிரி கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “சசிகலா, தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள்தான் இதற்கு பின்புலமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித் துறை விசாரித்துவருவதால் அதற்குள் போக விரும்பவில்லை” என்று ஜெயக்குமார் கருத்து தெரித்துள்ளார்.
எனினும் சொத்துக்கள் வாங்கியதாக சொல்லப்படும் நேரத்தில் சசிகலா அதிமுகவில்தான் இருந்தார். இதுதொடர்பாக சந்தேகம் எழுப்பிய கே.எஸ்.அழகிரி, “இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அதிமுக ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பேசினாலும், அதிமுகவிலிருந்து இதுதொடர்பாக பலமான எதிர்ப்புக்குரல் எதுவும் எழவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
